போலி செயலி மூலம் பான்கார்டை புதுப்பிப்பதாக கூறி நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1½ லட்சம் மோசடி


போலி செயலி மூலம்  பான்கார்டை புதுப்பிப்பதாக கூறி நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
x

பான் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. தனியார் வங்கியின் பெயரில் போலி செயலி மூலம் நூதன மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை


பான் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. தனியார் வங்கியின் பெயரில் போலி செயலி மூலம் நூதன மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகைக்கடை உரிமையாளர்

மதுரை தெற்கு ஆவணி மூலவீதி, மேல செட்டி தெருவை சேர்ந்தவர் சந்தீப் (வயது 35). நகைக்கடை உரிமையாளர். இவர் தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணிற்கு ஒருவர் பேசி, உங்களின் ஆதார் மற்றும் பான் கார்டை புதுப்பிக்க வேண்டும். உடனே நான் தெரிவிக்கும் ஒரு நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு கூறினார்.

இதில் சந்தேகம் அடைந்த சந்தீப் நேராக தெற்குமாசிவீதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று இது குறித்து கேட்டார். வங்கி மேலாளரும் உங்களின் பான் கார்டை மட்டும் புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அவருக்கு ஒரு செயலியை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி இதன் மூலம் புதுப்பிக்குமாறு கூறினார். வங்கி மேலாளர் தெரிவித்ததால் அந்த செயலியை சந்தீப் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தார். அவர் பதிவிறக்கம் செய்த சில நிமிடத்தில் ஏற்கனவே பேசிய நபரும் அதே செயலியை அவரது செல்போனுக்கு அனுப்பி உள்ளார்.

பண மோசடி

அதன்பின்னர் அந்த செயலி மூலம் பான்கார்டை புதுப்பித்து விட்டு சென்று விட்டார். ஒரு மணி நேரத்தில் அவரது செல்போனிற்கு வங்கியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் உங்களது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தீப் உடனே வங்கிக்கு சென்று நடந்த விவரங்களை தெரிவித்தார். வங்கி மேலாளரும் அதிர்ச்சி அடைந்து பணம் பரிவர்த்தனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேலும் இது குறித்து சைபர்கிரைம் போலீசில் உடனே புகார் அளிக்குமாறு தெரிவித்து, ஆன்லைன் மூலம் புகாரை பதியவும் செய்தார். அதனை தொடர்ந்து சந்தீப் மதுரையில் உள்ள சைபர்கிரைம் போலீஸ் நிலையம் சென்று அங்கு இன்ஸ்பெக்டர் செல்வகுமாரிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்து புகார் அளித்தார். உடனே இன்ஸ்பெக்டர் வங்கி அதிகாரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தனக்கும் வங்கி அலுவலர் மூலம் தான் இந்த செயலி கிடைத்ததாகவும், கடந்த 7-ந் தேதியில் இருந்து தான் இந்த செயலியை சிலருக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார். ஆனால் வேறு யாரும் பணம் பறிபோனது குறித்து தங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், வங்கி மேலாளர் மற்றும் அவருக்கு பேசிய நபர் அனுப்பிய செயலியும் ஒரே மாதிரி இருப்பதும், அந்த போலி செயலி மூலம் தான் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்தும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் உடனே சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததால் அவரின் வங்கி பரிமாற்றம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த பணம் அவருக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். எனவே வாடிக்கையாளர்கள் இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story