தமிழ்நாடு என்று கூறுவோர் திராவிட இயக்க ஆட்சியை ஒப்புக் கொண்டுள்ளனர் - கி.வீரமணி


தமிழ்நாடு என்று கூறுவோர் திராவிட இயக்க ஆட்சியை ஒப்புக் கொண்டுள்ளனர் - கி.வீரமணி
x

தமிழ்நாடு என்று கூறும் ஒவ்வொருவரின் நாக்கும் திராவிட இயக்க ஆட்சியை ஒப்புக் கொண்டு உச்சரிக்கின்றன என கி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

'சென்னை மாநிலம்' என்றும், 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் அழைக்கப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு, அரசு ரீதியாக சட்டப்படி 'தமிழ்நாடு' என்று மாற்றப்பட்ட - வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் 18.7.1967 ஆகும்.

1967 ஜூலை 18-ந் தேதி (இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்பு) அரசு ரீதியாக சென்னை மாநிலம் என்பதைத் ''தமிழ்நாடு'' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தீர்மானத்தை அப்போதைய முதல்-அமைச்சர் அண்ணா முன்மொழிய நிறைவேற்றப்பட்டது. 'தமிழ்நாடு' என்று முதல்-அமைச்சர் கூற, உறுப்பினர்கள் 'வாழ்க' என்று மும்முறை முழங்கினர்.

பின்னர், 28.11.1968 அன்று தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1969 ஜனவரி 14-ந் தேதி 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது ''தமிழ்நாடு'' என்று அதிகாரப்பூர்வமாக மாறியது என்பது வரலாற்று ரீதியான அரிய தகவல்களாகும். 'திராவிட மாடல்' அரசு என்றால் கேலியும், கிண்டலும் செய்யும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்நாடு என்று இன்றைக்குக் கூறுவோர், அவர்களை அறியாமலேயே தந்தை பெரியாரை, அறிஞர் அண்ணாவை, திராவிட இயக்க ஆட்சியை ஒப்புக்கொண்டு, அவர்களின் நாக்குகள் உச்சரிக்கின்றன என்பதுதான் உண்மை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story