குரூப் 4 தேர்வு: ஆசையோடு தேர்வு எழுத வந்தவர்கள்,கண்ணீருடன் திரும்பிச் சென்ற தேர்வர்கள்; கால தாமதமாக வந்ததால் உள்ளே செல்ல அனுமதி மறுத்த அதிகாரிகள்...!


குரூப் 4 தேர்வு:  ஆசையோடு தேர்வு எழுத வந்தவர்கள்,கண்ணீருடன் திரும்பிச் சென்ற தேர்வர்கள்; கால தாமதமாக  வந்ததால் உள்ளே செல்ல அனுமதி மறுத்த அதிகாரிகள்...!
x

குரூப் 4 தேர்வுக்கு கால தாமதமாக சென்ற மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காததால் தேர்வர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,301 குரூப் 4 பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது.

தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள்ளாகத் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்றும், முகக்கவசம் கட்டாயம் என்றும், ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் எடுத்துவரக்கூடாது என்றும் முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருந்தது. மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெற்றது. மேலும் தேர்வர்களின் வசதிக்காக தமிழக அரசின் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்தநிலையில், தற்போது தேர்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், பல தேர்வு மையங்களில் தாமதமாக வந்த தேர்வர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் சாலை மறியல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதோடு, கண்ணீர் விட்ட சம்பவங்களும் அரங்கேறின.

தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 30க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர் அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார்.

இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவேண்டும் எனக்கூறி தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சீர்காழி தாசில்தார் செந்தில் குமாரையும் அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாசில்தார் 9 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் பிறருக்கு அனுமதி அளிக்கப்படாது என திட்டவட்டமாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் குருப் 4 தேர்வினை 9.05 மணிக்கு தேர்வு எழுத வந்தவர்களை உள்ளே அனுமதிக்காததால் தேர்வர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து பள்ளி கேட்டினை தள்ளி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதி உள்ள தனியார் பள்ளியில் 8:40 மணிக்கு தேர்வு எழுத வந்த வந்தவர்களை உள்ளே அனுப்பாமல் 20 மேற்பட்டோரை தேர்வு அதிகாரிகள் ஒரு மணி நேரமாக வெளியே நிற்க வைத்துள்ளனர். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்குமாறு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தனியார் மேல்நிலைப் பள்ளியில் எழுத வந்த மாணவி , காலதாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் ஹால்டிக்கெட்டை பள்ளி நுழைவு வாயிலேயே கிழித்தெறிந்து சென்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு எழுத காலதாமதமாக வந்த 40க்கும் மேற்பட்டவர்களை உள்ளே அனுமதிக்காததால் மாணவர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, புதுக்கல்லூரியில் குரூப் 4 தேர்வு எழுத தாமதமாக வந்ததாக கூறி சிலர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை இதனால் தேர்வு மைய வாசலில் அமர்ந்து தேர்வர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, கடலூர், திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதனால் அரசுப்பணி ஆசையோடு தேர்வு எழுத வந்த தேர்வர்கள் ஏமாற்றத்துடனும் சிலர் கண்ணீருடனும் திரும்பிச் சென்றனர்.


Next Story