தூத்துக்குடி அண்ணாநகர் மெயின் ரோட்டை விரிவாக்கம் செய்ய மேயர் ஆய்வு


தூத்துக்குடி அண்ணாநகர் மெயின் ரோட்டை விரிவாக்கம் செய்ய மேயர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி அண்ணாநகர் மெயின் ரோட்டை விரிவாக்கம் செய்வது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி-பாளையங்கோட்டை மெயின் ரோடு வி.வி.டி. சிக்னல் சந்திப்பில் இருந்து தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் மற்றும் மேலூர் ரெயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய சாலையாக அண்ணாநகர் மெயின் ரோடு விளங்கி வருகிறது. திருச்செந்தூர் பகுதியில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களும் இந்த சாலை வழியாக செல்கின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. இதனால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து நேற்று மேயர் ஜெகன் பெரியசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளுடன் அண்ணாநகர் மெயின் ரோட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணாநகர் மெயின்ரோடு ஒவ்வொரு புறத்திலும் 8 அடி அகலம் என்ற அடிப்படையில் சிமெண்டு சாலையாக அமைக்கப்பட்டது. பின்னர் ரோட்டின் இருபக்கங்களிலும் பேவர்பிளாக் கற்கள் கொண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குறுகியதாக உள்ளதால் இதனை 3 மீட்டர் அளவிற்கு இருபுறத்திலும் விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்காக விரைவில் அளவீடு செய்யும் பணியும், அதனைத்தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் பணியும் நடைபெறும் என்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story