திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்


திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 7:31 PM GMT (Updated: 23 July 2023 12:01 PM GMT)

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

திருச்சி

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

தேரோட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரபாடல் பெற்ற 61-வது தலமாகும். இக்கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும், சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 6.10 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

அதைத்தொடர்ந்து மதியம் 3.10 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர், தேரோடும் வீதி வழியாக வலம் வந்து மாலை 5.10 மணிக்கு நிலையை அடைந்தது.

காயம்

தேர், சன்னகட்டை போடும்போது கவுண்டம்பட்டி மேலூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 55), பச்சைவெளி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (55) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.ராஜேந்திரனுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.செல்வராஜ் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவிஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். மண்ணச்சநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story