திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிரம்மதேசம் கிராமத்தில் பழமையான திரவுபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கடந்த 18 நாட்களாக மகாபாரத கதை ஒவ்வொரு நாளும் கோவில் முன்பு பாடப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காளி வேடம் அணிந்தவர்கள் முறத்தால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பஞ்சபாண்டவர்கள், காளி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்தவர்கள் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அப்போது காளி வேடமிட்டவர்களிடம் ஆண்கள் முறத்தால் அடி வாங்கினால் நோய்நொடி வராது எனவும், பேய், பிசாசு நெருங்காது எனவும், பெண்கள் அடி வாங்கினால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் எனவும், திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடை நீங்கும் எனவும் ஐதீகம் உள்ளதால், ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் என பக்தர்கள், காளி வேடம் அணிந்தவர்களிடம் முறத்தால் அடி வாங்கினர்.

இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அப்போது பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த சாந்தி(வயது 48) என்ற பெண் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தியபோது காலில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி அக்னி குண்டத்தில் விழுந்தார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திருவிழா நடைபெற்றதால் பிரம்மதேசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.


Next Story