பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
பி.எஸ்.எல்.வி. சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி (போயம்) ஒரு சுற்றுப்பாதை தளமாக அறிவியல் சோதனைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.
சென்னை,
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்.) ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்படும் வணிகப் பணியில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட 'டெலியோஸ்-2' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள், இதனுடன் 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற 2 செயற்கைகோள்களை கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் ஏவப்படுகிறது.
இதற்கிடையில், பி.எஸ்.எல்.வி. சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி (போயம்) ஒரு சுற்றுப்பாதை தளமாக அறிவியல் சோதனைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டுக்கான 25 மணி 30 நிமிட கவுண்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12.49 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறினார்கள்.