வெள்ளாற்றில் பாலம் கட்டியும் பயன் இல்லை


வெள்ளாற்றில் பாலம் கட்டியும் பயன் இல்லை
x

வெள்ளாற்றில் பாலம் கட்டியும் பயன் இல்லாத நிலை உள்ளது.

அரியலூர்

செந்துறை:

நீண்டகால கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் கோட்டைக்காடு கிராமத்துக்கும், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரம் கிராமத்துக்கும் இடையே வெள்ளாறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடக்க கோடை காலங்களில் மண்பாதை அமைத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மழைக்காலத்தில் அந்த பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும்.

இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் 2 மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்கதையாக இருந்தது. இதனால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

உயர்மட்ட பாலம்

இதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கலெக்டர்கள் மாநாட்டில், அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரியலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கோட்டைக்காடு - சவுந்திரசோழபுரம் இடையே வெள்ளாற்றில் சுமார் ரூ.11 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால், அந்த நிதி போதாது என்று பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டைக்காடு- சவுந்திரசோழபுரம் இடையே வெள்ளாற்றில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது. பாலம் முழுமையாக கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில், பாலத்தின் இருபுறத்தையும் சாலையுடன் இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்படவில்லை.

சுற்றிச்செல்லும் நிலை

இதனால் பாலம் கட்டியும் பலனின்றி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், விவசாய இடுபொருட்கள் எடுத்துச்செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பெண்ணாடத்துக்கு செல்கின்றனர். வெள்ளாற்றில் சிறிதளவு தண்ணீர் செல்லும்போது தண்ணீர் செல்ல குழாய் பதிக்கப்பட்டு, அதன் மீது கோட்டைக்காடு-சவுந்திரசோழபுரம் இடையே மண் பாதை அமைத்து, அதில் வாகனங்கள் சென்று வர அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடுகளை செய்கின்றனர். மேலும், இந்த மண் பாதை வழியாக பெண்ணாடத்துக்கு, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து 2 பஸ்களும் சென்று வருகின்றன.

மழைக்காலங்களில் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது இந்த 2 பஸ்களும் கோட்டைக்காடு செல்லாமல், தாமரைப்பூண்டி கிராமத்தில் இருந்து தளவாய் வழியாக பெண்ணாடத்துக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்கின்றன. கோட்டைக்காடு வெள்ளாற்று மேம்பாலம் திறக்கப்பட்டால் அரியலூரில் இருந்து விருத்தாசலத்துக்கும், விருத்தாசலத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கும் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன. இதன் மூலம் மழைக்காலங்களிலும் தடையின்றி பெண்ணாடம், விருத்தாசலத்துக்கு அரியலூர் மாவட்ட பகுதி மக்கள் எளிதிலும், விரைந்தும் சென்றுவர ஏதுவாக இருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

கோரிக்கை

மேலும் பொதுப்பணித்துறை சார்பில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. பெயிண்ட் அடிக்கும் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலத்தை இணைக்கும் வகையில் சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மழைக்காலத்துக்குள் அந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை அமைத்து, பாலத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story