நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் - எடப்பாடி பழனிசாமி


நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 30 Nov 2022 1:14 PM IST (Updated: 30 Nov 2022 4:29 PM IST)
t-max-icont-min-icon

நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு சென்று விட்டது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கின்றார்.

அவர் கவனத்துக்கு நான் சில தகவல்களை சொல்கிறேன். 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இதற்கு ஆங்கில பத்திரிக்கை ஆய்வு நடத்தி சான்று அளித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருந்தது.

ஆனால் இன்றைய நிலை என்ன? கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 36 மணி நேரத்தில் 12 கொலைகள் நடந்துள்ளது. ஆகவே சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என முதல்-அமைச்சர் சொல்ல வேண்டும். தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து படுபாதாளத்துக்கு விட்டது.

தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது. 2,138 பள்ளி, கல்லூரி வளாகத்திலேயே கஞ்சா விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஏன் அனைவரையும் இதில் கைது செய்யவில்லை. இதில் ஆளுங்கட்சியினரே ஈடுபட்டு இருக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. கவுன்சிலருக்கு தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது. ஆனால் இது முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை. எனவே பொம்மை முதல்-அமைச்சர், திறமையற்ற முதல்-அமைச்சர். உள்துறையை கையில் வைத்துள்ள முதல்-அமைச்சர் இன்று போதை பொருள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

தி.மு.க. பொதுக்குழு நடந்தபோது மு.க.ஸ்டாலின், நான் உறங்கி காலையில கண்விழ்கின்ற பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கின்றேன். நம்முடைய கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ? என்று பயத்தில் கண்விழிக்கிறேன் என்றார். இது அவர் கொடுத்த வாக்குமூலம், நாங்கள் சொல்லவில்லை. எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை.

எனவே போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வினர் ஈடுபடுவது தெள்ளத்தெளிவாகிவிட்டது. அந்த கட்சியின் தலைவரே ஒப்புதல் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமை அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வருகின்ற அன்றாட செய்தியை வைத்து தான் இதை நாங்கள் சொல்கிறோம். எதிர்க்கட்சியாக எங்கள் கடமையை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுகிறோம்.

ஆனால் அவர்கள் நாட்டு மக்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை. ஒரு முதல் -அமைச்சரின் கடமை என்ன? நாட்டு மக்களை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக வீட்டு மக்களை பற்றியே சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

தமிழகத்தில் பல அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பில்லை. அதை நான் அறிக்கை வாயிலாக வெளியிட்டேன் அதையெல்லாம் அவர் அமைச்சருடன் ஆலோசிக்காமல் தனது மகன் நடித்த திரைப்படம் எப்படி உள்ளது? அது அதிக வசூலை கொடுக்குமா? என்று அமைச்சரிடம் விவாதிக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திலே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி லட்சக்கணக்கான முதலீட்டில் தொழில் தொடங்க வழி செய்தோம். பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தினோம்.

விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். புயல், வெள்ள பாதிப்புகளின்போது உரிய நிவாரணம் உடனடியாக வழங்கினோம். விவசாயிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவர்கள் பயிரிட்ட அந்த பயிர்கள் எல்லாம் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிகமான காப்பீட்டை அ.தி.மு.க. அரசுதான் விவசாயிகளுக்கு பெற்றுத்தந்தது. குடிமராமத்து திட்டம் மூலம் தண்ணீரை நீர்நிலைகளில் சேமிக்க செய்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டப் பணிகளும் நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story