வீடுபுகுந்து 10 பவுன் நகை - 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை


வீடுபுகுந்து 10 பவுன் நகை - 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
x

பூட்டி இருந்த ஆசிரியரின் வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு கதவை வேறு பூட்டால் பூட்டிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம்


பூட்டி இருந்த ஆசிரியரின் வீட்டிற்குள் புகுந்து 10 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு கதவை வேறு பூட்டால் பூட்டிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆசிரியர்

ராமநாதபுரம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மகன் சொர்ணகணபதி (வயது 36). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் நெல்லைக்கு சென்றுவிட்டாராம். இதை நோட்டமிட்டு அறிந்து நபர்கள்பூட்டை உடைத்து அவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வெளிக்கதவில் வேறு பூட்டை வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து திரும்பி வந்த சொர்ணகணபதி, தனது வீட்டிற்கு சென்றபோது வேறு பூட்டு போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் கதவை திறக்க முடியாத நிலையில் அருகில் இருந்த கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

10 பவுன் நகை

தங்கவளையல், சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருந்தன. இதுதவிர விளக்குகள், சந்தனபேழை, குங்கும சிமிழ் உள்பட 2 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதுபற்றி தகவல்அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் பெயர், செல்போன் எண் போன்றவை சமூக வலைதளங்களில் காவல்துறை சார்பில் தினமும் வெளியிடப்படுகிறது. இவ்வாறு ரோந்து சுற்றி வந்த நிலையிலும் கொள்ளை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story