தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற போலீசாரை கிராம மக்கள் முற்றுகை


தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற போலீசாரை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 Aug 2023 6:45 PM GMT (Updated: 18 Aug 2023 6:47 PM GMT)

தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற போலீசாரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். வீடுகளில் குவியல், குவியலாக மணல் குவித்து வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

மணல் கொள்ளை

கடலூர் அருகே இரண்டாயிர வளாகம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாகவும், இரவில் மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ளி அதனை வீடுகள் மற்றும் திறந்தவெளி பகுதியில் குவியல், குவியலாக குவித்து வைத்து பகலில் லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்படுவதாகவும் தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் இரண்டாயிர வளாகம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் திறந்தவெளியில் குவியல், குவியலாக மணல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசாரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

மேலும் சிலர் தென்பெண்ணையாற்றில் இருந்து மணலை மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். சிலர் ஏற்கனவே வீடுகளின் அருகில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலை மினி லாரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். உடனே போலீசார் மினி லாரிகள் மற்றும் மணலை பறிமுதல் செய்யவும், கடத்தல்காரர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது பற்றி அறிந்ததும் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து போலீசாரை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மணல் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

16 பேர் மீது வழக்கு

இதையடுத்து 2 மினி லாரிகளை மட்டும் போலீசார் பறிமுதல் செய்து, தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் மணல் கடத்தல் சம்பந்தமாக புதுச்சேரி மாநிலம் கொம்பாக்கத்தை சேர்ந்த வேல்முருகன், குருவிநத்தம் நடராஜன் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மணலை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story