கால்நடை ஆஸ்பத்திரி புதிதாக கட்டித்தர வேண்டும்


கால்நடை ஆஸ்பத்திரி புதிதாக கட்டித்தர வேண்டும்
x

கால்நடை ஆஸ்பத்திரி புதிதாக கட்டித்தர வேண்டும்

திருவாரூர்

எழிலூர் ஊராட்சியில் கால்நடை ஆஸ்பத்திரி புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

எழிலூர் ஊராட்சி

திருத்துறைப்பூண்டியில் உள்ள எழிலூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கால்நடை ஆஸ்பத்திரி இல்லை. இந்த ஊராட்சி பகுதிகளில் அதிகமாக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது வீடுகளில் மாடுகள், ஆடுகள், மற்றும் கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்ந்து வருகி்ன்றனர். எழிலூரில் பழைய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் அருகில் கால்நடை மருத்துவரால் வாரத்தில் 3 நாட்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்போது மருத்துவர் வரவில்லை என்றால் கால்நடைகளை அழைத்துக்கொண்டு திருத்துறைப்பூண்டி கால்நடை ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டும். இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே எழிலூர் ஊராட்சியில் புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தரவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிதாக கட்டித்தர வேண்டும்

எழிலூர் பகுதியை சேர்ந்த விவசாயி கருப்பையன்:- எழிலூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு ஆஸ்பத்திரி இல்லை. இங்கு ஆஸ்பத்திரி இல்லாததால் இந்த ஊருக்கும், மற்ற ஊர்களுக்கும் சேர்த்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் கால்நடை மருத்துவர்கள் இங்கு வருகிறார்கள். இதனால் மருத்துவர்கள் வராத நேரங்களில் கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே நிரந்தரமாக எழிலூர் ஊராட்சிக்கு 2 கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள் மற்றும் கால்நடை ஆஸ்பத்திரி புதிதாக கட்டித்தர வேண்டும் என்றார்.

போதிய மருந்து, மாத்திரைகள்

எழிலூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த விவசாயி ஆச்சிஅம்மா:- எழிலூர் ஊராட்சியில் அதிகமாக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருமே கால்நடைகள் வளர்க்கின்றனர். ஆனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கு ஆஸ்பத்திரி இல்லை. இதனால் அவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை ஆஸ்பத்திரி புதிதாக கட்டித்தர வேண்டும். போதிய மருந்து, மாத்திரைகள் கால்நடைகளுக்கு வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story