வேப்பூர் அருகே பெண் சாவில் திருப்பம்:நகைக்காக கொலை செய்த தம்பி மகள் நண்பருடன் கைது
வேப்பூர் அருகே பெண் சாவில் திடீர் திருப்பமாக, அவரை தம்பி மகள் நகைக்காக தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
வேப்பூர்,
வீட்டுக்குள் பெண் பிணம்
வேப்பூர் அடுத்த சிறுகரம்பலூர் ராஜவீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி தையல்நாயகி (வயது 67). மாணிக்கம் கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தையல்நாயகி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
25-ந்தேதி வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தையல்நாயகி, நேற்று முன்தினம் காலையில் வீட்டுக்குள் இறந்த நிலையில் கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை
மேலும், தையல் நாயகியிடம் இருந்த நகை மற்றும் அவரது சொத்தை அபகரிக்கும் வகையில் யாரேனும் அவரை கொலை செய்தார்களா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே அவரது பிரேத பரிசோதனை முடிவில், தையல்நாயகி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கிராமத்தில் விசாரணையை துரிதப்படுத்தினர்.
அப்போது, தையல் நாயகியின் வீட்டுக்கு அவரது தம்பி சுப்பிரமணி என்பவரது மகளும், பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவியுமான ரேவதி (36) என்பவர் வந்து சென்றது தெரியவந்தது.
மேலும், அவர் தனது அத்தையான தையல்நாயகி வீட்டுக்கு அடிக்கடி வந்து கடன் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
போர்வையால் அழுத்தி கொன்றனர்
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் ரேவதியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, சம்பவம் நடந்த இரவு தானும், தனது நண்பரான பெண்ணாடத்தை சேர்ந்த சுதாகரன்(43) என்பவருடன் சிறுகரம்பலூர் வந்து தையல் நாயகியை போர்வையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையையும் எடுத்து சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, ரேவதி, சுதாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.