ஆசிரியை வீட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை


ஆசிரியை வீட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
x

சங்கரன்கோவிலில் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆசிரியை வீட்டை உடைத்து 30 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

ஆசிரியை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி இளங்கோ தெருவை சேர்ந்தவர் அழகர். இவர் தபால் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருடைய மகள் கற்பகவள்ளி. இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கூடலூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் வெளியூரில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். மகள் வீட்டில் வசித்து வந்த அழகர், தாமரை நகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி அங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது.

நகை- பணம் கொள்ளை

சம்பவத்தன்று இரவு தந்தையை பார்ப்பதற்காக கற்பகவள்ளி தனது வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்றார். நேற்று முன்தினம் காலையில் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் அவருடைய குழந்தைகள் சேமித்து வைத்திருந்த உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்து பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் இருக்கும்.

போலீஸ் நிலையங்கள்

இந்த துணிகர கொள்ளை தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசில் கற்பகவள்ளி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், டவுன் போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் என அனைத்து போலீஸ் நிலையங்களும் அமைந்துள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story