திருவண்ணாமலை மாடவீதிகளில் சிமெண்டு சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்


திருவண்ணாமலை மாடவீதிகளில் சிமெண்டு சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
x

திருவண்ணாமலை மாடவீதிகளில் சிமெண்டு சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.

திருவண்ணாமலை

பா.ஜ.க.வின் ஆன்மிகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவின் பயிற்சி முகாம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

முகாமில் கலந்துகொண்டு பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறையில் தேர்வு வைத்து பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆட்கள் நியமிக்கப்படுவதாக தகவல் வருகிறது. இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற கூடாது.

அருணாசலேஸ்வரர் கோவில் சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்க பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவிக்கின்றது. சிமெண்டு சாலை அமைத்தால் தேரோட்டம் நடைபெறாது. எனவே தமிழக அரசு மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேட்டியின் போது செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டதில் செய்தியாளர்கள் அனைவரும் இந்து மதத்திற்கு எதிராக கேள்விகளை கேட்பதாக கூறி எச்.ராஜா செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவர் செய்தியாளர்கள் யாரும் முறையாக படிப்பதில்லை என்று கூறியதோடு, கார்ல்டுவெல் போன்றோர் எழுதிய புனை சுருட்டுகளை படிப்பதாக கூறியதால் செய்தியாளர் ஒருவர் மகாபாரதமும், புனை சுருட்டு தானே என்று கூறியதால் பா.ஜ.க.வினருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததால் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story