தக்காளி விலை கிடு கிடு உயர்வு
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடு என உயர்ந்து உள்ளது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடு கிடு என உயர்ந்து உள்ளது.
வரத்து குறைந்தது
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வருவதால், காய்கறிகள் உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து இருக்கிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மொத்தம் 700 பெட்டி தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்தது. வரத்து குறைந்ததால், தக்காளிக்கு அதிக விலை கிடைத்தது.
கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்பனையானது. தற்போது தக்காளி வரத்து குறைந்து வருவதால், தக்காளி விலை மேலும் அதிகரித்து உள்ளது. நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.23 வரை ஏலம் போனது. இது கடந்த மாதத்தை விட ஒரு கிலோவுக்கு ரூ.8 அதிகமாகும்.
விலை அதிகரிப்பு
தினசரி காய்கறி சந்தையில் தக்காளி அதிக விலைக்கு ஏலம் போனதால், தற்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருந்தது. அதன்படி, கத்தரிக்காய் (15 கிலோ) ரூ.300, முள்ளங்கி (15 கிலோ) ரூ.350, ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.35, அவரைக்காய் ரூ.25, பீட்ரூட் ரூ.12 வரை ஏலம் போனது.
வெண்டைக்காய் வரத்து குறைவாக உள்ளதால், நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.55, பாகற்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.40, பொரியல் தட்டை பயறு ரூ.30, நேந்திரம் ரூ.25, செவ்வாழை (ஒரு தார்) ரூ.800, ரஸ்தாலி ரூ.300-க்கும், பூவன் ரூ.400-க்கும் ஏலம் போனது.