மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரிப்பு


மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 6:45 PM GMT)

காய்கறி, பழங்களின் விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ சீரகம் ரூ.650, பொன்னி அரிசி ரூ.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் தக்காளி ரூ.92 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர இஞ்சி, பீன்ஸ், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ ஆப்பிள் ரூ.240, மாதுளை ரூ.200, சாத்துக்குடி ரூ.80, ஆரஞ்சு ரூ.140-க்கு விற்பனையானது.

இதற்கிடையில் காய்கறி, பழங்களை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இது இல்லத்தரசிகளை மேலும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு பேரிடியாக அமைந்து உள்ளது.

சீரகம் ரூ.650

மளிகை பொருட்களில் குறிப்பாக சீரகம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இருக்கிறது. அதாவது கடந்த மாதம் தொடக்கத்தில் ரூ.200, ரூ.250 என விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சீரகம் தற்போது கிலோ ரூ.600 முதல் ரூ.650 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ.110-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட மல்லி ரூ.150-க்கும், ரூ.220-க்கு விற்கப்பட்ட சோம்பு ரூ.350-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட வறு கடலை ரூ.85-க்கும், கேழ்வரகு, கம்பு தலா ரூ.4 உயர்ந்து ரூ.40, ரூ.36-க்கும், ரூ.220-க்கு விற்கப்பட்ட மிளகாய் ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அரிசி விலையும் அதிகரிப்பு

பொன்னி (25 கிலோ) ஒரு மூட்டை ரூ.1050-ல் இருந்து ரூ.1600-க்கும்(ஒரு கிலோ அரிசி ரூ.64), பி.பி.டி. ரூ.900-ல் இருந்து ரூ.1300-க்கும், ஐ.ஆர்.ஐம்பது ரூ.900-ல் இருந்து ரூ.1000-க்கும், டீலக்ஸ் ரூ.900-ல் இருந்து 1200-க்கும், சோனா ரூ.1150-ல் இருந்து ரூ.1400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காரணம் என்ன?

விலை உயர்வு குறித்து மஞ்சக்குப்பத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், மளிகை பொருட்கள் பெரும்பாலும் ஆந்திரா, மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தான் வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. சில மளிகை பொருட்களை மொத்த வியாபாரிகள் பதுக்கி வைத்து, விலையை உயர்த்தி வருவதாக கூறுகிறார்கள். சிலர் அந்த மாநிலங்களில் மழை பெய்து வருவதால் உற்பத்தி குறைந்து விட்டதாக கூறுகிறார்கள். இதற்கு உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை. சீரகம் விலை இதற்கு முன்பு 200 ரூபாயை தாண்டியதில்லை. ஆனால் இப்போது ரூ.650 வரை உயர்ந்து உள்ளது. அரிசி விலையில் நிலையற்ற தன்மை உள்ளது. நாள்தோறும் உயரும் நிலை உள்ளது என்றார்.


Related Tags :
Next Story