இணைய வழி பண பரிமாற்றம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும்


இணைய வழி பண பரிமாற்றம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:47 PM GMT)

கிராம ஊராட்சிகளில் இணைய வழி பண பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை

கூட்டமைப்பு கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் சிவகங்கையில் மாவட்டதலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் 12 ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிராம ஊராட்சிகளில் டி.என்.பாஸ் எனும் இணைய வழி பண பரிமாற்றம் நடைமுறைப்படுத்த அரசு ஆணை குறிப்பிட்டுள்ளது. அது ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இதனால் கிராம ஊராட்சியில் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க முடியவில்லை. ஊராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை ஆகையால் அதை அரசு கைவிட வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு கிராம சபை தீர்மானம் இல்லாமல் நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம்

மேலும் கணக்கு எண் இரண்டில் உள்ள உபரி நிதிகளை உடனே கிராம ஊராட்சி பணிகளுக்கு வழங்க வேண்டும். ஏற்கனவே திட்ட நிதியிலிருந்தும், உபரிநிதியில் இருந்தும் ஒவ்வொரு கிராம ஊராட்சியில் இருந்தும் மாவட்ட கலெக்டருக்கு டிராப்ட் வழங்கி ஒரு வருட காலத்திற்கு மேலாகிவிட்டது. அந்த பணம் மீண்டும் எங்கள் ஊராட்சி பணிகளுக்கு வர வேண்டும். இதற்கு முன்னால் கிராம சபையில் கொண்டு வரும் தீர்மானத்தின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டது. தற்போது அரசு கொண்டுவரும் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அந்த நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும்.

பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994-ன்படி கிராம ஊராட்சிகள் சுயமாக செயல்பட கலெக்டர் ஆவன செய்ய வேண்டும். அந்தந்த ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலாளர் பணி நியமனம் செய்ய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story