கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க காத்திருந்த மூதாட்டி


கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க காத்திருந்த மூதாட்டி
x

கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க மூதாட்டி காத்திருந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா நன்னை கிராமத்தை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 70). இவர் தனி ஒரு ஆளாக அப்பகுதியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கோர்ட்டு வரை சென்று போராடியுள்ளார். இதைத்தவிர பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்டராக பணிபுரிந்த 4 கலெக்டர்களை சந்தித்து மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக மனுக்கள் கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் போராடியும் உரிய தீர்வு கிடைக்காத விரக்தியில் நல்லம்மாள் இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக உள்ள கற்பகத்தை சந்தித்து மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நம்பிக்கையில் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார்.

ஆனால் கலெக்டர் அரசு விழாக்களில் கலந்து கொள்ள வெளியே சென்றதால் அவரை நல்லம்மாள் பார்க்க முடியவில்லை. இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க நல்லம்மாள், பழைய கலெக்டர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுத்த மனுக்களின் நகல்கள், கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களின் நகல்கள், தீர்ப்பின் நகல்கள், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளின் கோப்புகள், நீர்நிலைகளின் வரைபடங்கள் ஆகியவற்றை 2 பைகளில் வைத்து, அவற்றை சுமந்தவாறு மனு கொடுக்க வந்தார். ஆனால் அப்போது கலெக்டா் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்களை பார்வையிட வெளியே சென்றதால், நேற்றும் நல்லம்மாளால் கலெக்டரை சந்திக்க முடியாமல் போனது. எப்படியாவது இந்த கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பேன். அவர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன் திரும்பி வருவேன் என்று கூறிய நல்லம்மாள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.


Related Tags :
Next Story