அன்புஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை


அன்புஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:45 PM GMT)

விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, குரங்குகளை வைத்து கடிக்க செய்தது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது, 15 பேர் மாயமானது தொடர்பாக ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம், மாநில மகளிர் ஆணைய அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில் நேற்று தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் சுனில் குமார்மீனா தலைமையில் பட்டில்கேட்டன் பலி ராம், ஏக்தா பக்வித்தா, மோனியா உப்பல், சந்தோஷ்குமார், பிஜீவ், ஆகிய குழுவினர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 14 ஆண்கள், 6 பெண்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்றும், ஆசிரமத்தையும் குழுவினர் ஆய்வு செய்யவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக டாக்டர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் விசாரணை

இதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்றனர். பின்னர் அங்கு அவர்கள், அன்பு ஜோதி ஆசிரம வழக்கை ஆரம்ப கட்டத்தில் விசாரித்த கெடார் போலீசார் மற்றும் தற்போது விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி.போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான போலீசாரிடமும் விசாரணை நடத்தினர்.


Next Story