பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது


பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 23 March 2023 12:15 AM IST (Updated: 23 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் சிலரை ஏமாற்றினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் சிலரை ஏமாற்றினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசில் பெண் புகார்

தூத்துக்குடியை சேர்ந்தவர் பியூலா. இவருக்கும், சென்னையை சேர்ந்த வினோத்ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 7.2.2011 அன்று தூத்துக்குடியில் வைத்து திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பியூலா ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் கூறிஇருப்பதாவது:-

வினோத்ராஜ்குமார் என்னை திருமணம் செய்யும் போது, அவருக்கு இதுவரை திருமணமாகவில்லை என்று கூறி இருந்தார். திருமணத்துக்கு பிறகு நாங்கள் 2 பேரும் திருச்சியில் வசித்து வந்தோம். வினோத்ராஜ்குமார் துபாயில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் என்னையும் துபாய்க்கு அழைத்து சென்றார். அதன்பிறகு பிரசவத்துக்காக நான் தூத்துக்குடிக்கு வந்து விட்டேன்.

4 திருமணங்கள்

சிறிது நாட்கள் கழித்து துபாயில் இருந்து வினோத்ராஜ்குமார் திடீெரன தூத்துக்குடிக்கு வந்தார். கம்பெனியில் தகராறு என்றும், ஓமனுக்கு செல்வதாக கூறிச்சென்றார். மேலும் பல்வேறு செலவுகளுக்காக பலமுறை என்னிடம் பணம் பெற்றார். எனது நகைகளையும் அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் மீண்டும் ஊருக்கு வந்தவர், கடந்த 25.1.21 அன்று எங்கள் வீட்டில் இருந்து ஓமனுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன்பிறகு என்னுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.

இதனால் நாங்கள் விசாரித்த போது, வினோத்ராஜ்குமார், அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து ஏற்கனவே கரூரை சேர்ந்த ஒரு பெண்ணையும், தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்து இருப்பதும், அவர்களை விவாகரத்து செய்யாமல் என்னை 3-வது திருமணம் செய்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் தற்போது ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 4-வதாக திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசிப்பதும் தெரியவந்தது.

ரூ.56 லட்சம் மோசடி

இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆகையால் என்னுடைய பணம் ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் அபகரித்தும், நகைகளை வங்கியில் அடமானம் வைத்து அதன்மூலம் ரூ.20 லட்சம் அபகரித்து மோசடி செய்ததற்கும், ஏற்கனவே திருமணமானதை மறைத்து என்னை திருமணம் செய்ததற்காகவும் வினோத்ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பிடிவாரண்டு

அதன்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வினோத்ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 9 பேர் மீது, கடந்த 19.10.22 அன்று வரதட்சனை கேட்டு துன்புறுத்தியது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் வினோத்ராஜ்குமார் கைதாகாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அதிரடி கைது

இந்த நிலையில் சென்னையில் இருந்த வினோத்ராஜ்குமாரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் 4 பெண்களை திருமணம் செய்து உள்ளாரா?, அந்த பெண்களிடம் பணம், நகை மோசடி செய்து உள்ளாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story