ஆள் உயர பேனா சின்னம் கொடுத்துமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
ஆள் உயர பேனா சின்னம் கொடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று பகல் 11 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சக்கரபாணி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ., தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், மதுரை கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் திரண்டு இருந்த தி.மு.க.வினர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டதும் உற்சாகம் அடைந்து வாழ்த்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். தி.மு.க. இளைஞர் அணியினர், மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் ஜெ.மூவேந்திரன், துணை அமைப்பாளர் மதி.வெங்கடேஷ், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆள் உயர பேனா சின்னத்தை வழங்கி வரவேற்றனர். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு பெருங்குடிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த மக்கள் அவருக்கு பூக்கள் கொடுத்து, வரவேற்றதுடன் மனுக்களையும் அளித்தனர். இதுபோல் மண்டேலா நகர் பகுதியிலும் மக்கள் மனுக்களை கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து காரில் புறப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலெக்டர் அலுவலகம் வந்து கள ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.