கீழே கிடந்த நகை, பணம் ஒப்படைப்பு


கீழே கிடந்த நகை, பணம் ஒப்படைப்பு
x

நெல்லையில் கீழே கிடந்த நகை, பணம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை பரணி நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 35 கிராம் தங்க நகையை காணவில்லை என்று புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று பாளையங்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அந்த நகைகளை கீழே கிடந்து எடுத்துள்ளார். அவர் இதனை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார். இதையொட்டி நேற்று 2 பேரும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் முன்னிலையில் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

இதேபோல் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மங்கம்மாள் சாலை சமுதாய நல கூடம் அருகில் நேற்று முன்தினம் கே.டி.சி. நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவீந்திரநாதன் என்பவர் ஆட்டோவில் சென்றபோது கீழே கிடந்த பையிலிருந்த ரூ.42,600-ஐ எடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அந்த பையில் இருந்த ஆவணங்கள் மூலம் தொலைபேசியில் விசாரித்து தகுந்த அடையாளங்களை சரிபார்த்து உரிய நபரான கே.டி.சி. நகரை சேர்ந்த ஆல்பர்ட் ஜோசப் என்பவருக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து அவரை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து பணத்தை ஒப்படைத்தனர். மேலும் நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ரவிந்திரநாதனை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் பாராட்டினார்.


Next Story