ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பலியான 2 பேரின் அடையாளம் தெரிந்தது


ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பலியான 2 பேரின் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 26 Sep 2023 12:30 PM GMT (Updated: 26 Sep 2023 12:30 PM GMT)

ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பலியான 2 பேரின் அடையாளம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருவள்ளூர்

2 பேர் பலி

ஆவடி ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். சிறுவன் படுகாயம் அடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான 2 பேரும் யார்? என விசாரித்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில் பலியான 2 பேரின் அடையாளம் தெரியவந்தது. அதில் பலியான ஆண், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்பதும், அந்த பெண் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிக்காகுளம் அடுத்த ராகுல் மண்டலம் பகுதியை சேர்ந்த மங்கா (36) என்பதும், படுகாயம் அடைந்த சிறுவன் அவருடைய மகனான நவீன் (12) என்பதும் தெரியவந்தது.

கூலி தொழிலாளிகள்

இவர்களில் ரமேஷ், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு குழாய் பதிக்கும் கூலி வேலை செய்து வந்தார். சக தொழிலாளிகளுடன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு கோவில்பதாகை பகுதியில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். சக தொழிலாளர்கள் அனைவரும் மேம்பாலத்தில் ஏறி சென்றுவிட ரமேஷ் மட்டும் மேம்பாலத்தில் செல்லாமல் கீழே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி உயிரிழந்தார்.

இதேபோல் மங்கா, தன்னுடைய கணவர் அப்பன்னாவுடன் ஆவடி கோவர்த்தனகிரி அருகே தங்கி கூலி வேலை செய்து வந்தார். விசாகப்பட்டினத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் அவருடைய மகன் நவீனுக்கு உடல் நலம் சரியில்லாததால் சில நாட்களுக்கு முன்பு ஆவடி வந்து பெற்றோருடன் தங்கி இருந்தான். மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோதுதான் ரெயில் மோதி மங்கா பலியானதும், நவீன் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.


Next Story