மின்கம்பி அறுந்து விழுந்து சிறுமி படுகாயம்


தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:46 PM GMT)

குத்தாலம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து சிறுமி படுகாயம் அடைந்தார். மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து சிறுமி படுகாயம் அடைந்தார். மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்கம்பி அறுந்து விழுந்தது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கப்பூர் ஊராட்சியில் பாரதி நகர் பகுதியில் நேற்று காலை சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து அங்கு விளையாடிக்கொண்டு இருந்த பாரதி நகரை சேர்ந்த கார்த்திக் மகள் கீர்த்தனா(வயது 11) என்ற சிறுமியின் காலில் விழுந்தது.

சிறுமி படுகாயம்

இதில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சிறுமி கீர்த்தனாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மங்கநல்லூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கப்பூர் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதில் கட்டப்பட்டுள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து மின்வாரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து தராத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும் பொதுமக்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் மயிலாடுதுறை-திருவாரூர் பிரதான சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story