சோதனை அடிப்படையில் தொடங்க இருக்கும் மீன் வியாபாரத்தை உடனே நிறுத்த வேண்டும்


சோதனை அடிப்படையில் தொடங்க இருக்கும் மீன் வியாபாரத்தை உடனே நிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:45 PM GMT)

அனிச்சம்பாளையம் அங்காடியில் சோதனை அடிப்படையில் தொடங்க இருக்கும் மீன் வியாபாரத்தை உடனே நிறுத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மீன் வியாபாரிகள் மனு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மொத்த மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தின் அருகில் இயங்கி வந்த தற்காலிக மீன் மார்க்கெட், அனிச்சம்பாளையத்தில் நவீன மீன் அங்காடியாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு எங்கள் சங்கத்தினருக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்ததற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில் நகராட்சியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் 2 சங்கங்களை நகராட்சி அதிகாரிகள் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனிச்சம்பாளையம் மீன் அங்காடியில் சோதனை அடிப்படையில் யார், யார் எத்தனை வாகனங்கள் நிறுத்தி எவ்வளவு அதிகமாக வியாபாரம் செய்து மொத்த வியாபாரி என்று நிரூபிப்பதன் அடிப்படையிலேயே கடைகள் ஒதுக்கப்படும் என்றனர். புதியதாக மொத்த வியாபாரத்தை தொடங்க உள்ள எங்களை அவர்களுக்கு சமமாக போட்டியிட செய்வது முறையற்றதாகும். எங்கள் இரு சங்கத்திற்கும் முறையாக கடைகளை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும்.

மேலும் தற்போது மீன் பிடிப்பதற்கு தடைக்காலமாக உள்ள இந்த சூழலில் நகராட்சி அதிகாரிகள், இன்றைய தினத்தில் இருந்து வியாபாரத்தை சோதனை அடிப்படையில் தொடங்க உள்ளதை உடனடியாக நிறுத்த வேண்டும். சங்கங்களின் அடிப்படையில் தற்போது புதியதாக இயங்கும் மொத்த வியாபாரிகள் சங்கத்திற்கு சங்க ரீதியாக மொத்த வியாபார கடை மற்றும் சில்லரை வியாபார கடைகள் ஒதுக்கித்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.


Next Story