பாதிக்கப்பட்டவருக்கு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


பாதிக்கப்பட்டவருக்கு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x

பாதிக்கப்பட்டவருக்கு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தெற்கு ஆயுதக்களம் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்தாஸ்(வயது 50). இவரது மனைவி ஜெயக்கொடி, வீடு கட்டுவதற்காக ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை கும்பகோணத்தில் உள்ள ஈகுவடாஸ் சுமால் பைனான்ஸ் வங்கி என்ற நிதி நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடனாக பெற்றுள்ளார். அப்போது அருள்தாஸ் அவருக்கு பாத்தியப்பட்ட சொத்தை பிணையமாக நிதி நிறுவனத்திற்கு அடமானம் எழுதி கொடுத்துள்ளார். நிதி நிறுவனம் கடன் வழங்கியபோது காப்பீட்டுக்கான பிரீமியத்தை பெற்றுக்கொண்டு, வீட்டுக் கடனுக்கான காப்பீட்டு பாலிசியை வழங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜெயக்கொடி இறந்து விட்டார். இதை தெரிவித்து, காப்பீடு மூலம் கடனை முடித்துக்கொண்டு, அடமான ஆவணத்தை திரும்பத் தருமாறு அருள்தாஸ், அந்த நிதி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அதற்கு காப்பீடு தொகை கிடைக்கும் வரை மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தினால், காப்பீட்டு தொகை வந்த பின்னர், அந்த தவணை தொகையை திரும்ப தருவதாகவும், அடமானத்தை ரத்து செய்து தருவதாகவும் நிதி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அருள்தாஸ் தவணை தொகை ரூ.57 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதத்தில் நிதி நிறுவனம் மொத்த கடனையும் திருப்பி செலுத்துமாறு இறந்தவரின் பெயருக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்தாஸ் நிதி நிறுவனம் சேவை குறைபாடு புரிந்ததாக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், புகார்தாரருக்கு சேவை குறைபாட்டிற்காக ரூ.1 லட்சம் இழப்பீடும், புகார்தாரரின் மனைவி இறந்த பின்பு வசூலிக்கப்பட்ட ரூ.57 ஆயிரத்தையும் நிதி நிறுவனம் புகார்தாரருக்கு வழங்க வேண்டும். அடமான ஆவணத்தை நான்கு வார காலத்துக்குள் ரத்து செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளது.


Next Story