விவசாயிகளே வாய்க்காலை தூர்வாரினர்


விவசாயிகளே வாய்க்காலை தூர்வாரினர்
x

விவசாயிகளே வாய்க்காலை தூர்வாரினர்

நாகப்பட்டினம்

தண்ணீர் இ்ல்லாமல் காய்ந்து கிடக்கும் குறுவை நெல் விதைகளை காப்பாற்ற விவசாயிகளே வாய்க்காலை தூர்வாரினர். மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையொட்டி நாகை கடைமடை விவசாயிகள் நேரடி விதைப்பாக குறுவை விதையை வயலில் தெளித்து தண்ணீருக்காக காத்திருந்தனர்.

போதுமான தண்ணீர் வரவில்லை

முழுமையாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால், சில இடங்களில் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் விதை தெளித்து தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

காவிரி நீரை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள சித்தாய்மூர் ஊராட்சி கீரம்பேர் பாசன வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களுக்கு காவிரி நீர் சென்று சேரவில்லை.

அதாவது வெள்ளையாற்றிலிருந்து பிரிந்து பாசன வசதி பெறும் இந்த கீரம்பேர் வாய்க்கால் தூர்வாரி 5 ஆண்டுகளுக்கு மேலானதால் புதர் மண்டி கிடந்தது.

விதை நெல் கருகும் அபாயம்

மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இந்த பகுதிக்கு குறைவாக வந்ததால் புதர்மண்டி கிடந்த இந்த வாய்க்காலை கடந்து வயல்களுக்கு செல்லமுடியவில்லை.

இந்த பாசனத்தை நம்பி சுமார் 1000 ஏக்கருக்கு வயலில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விதைநெல் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் இருந்தது. இதனால் ஆற்றில் இருந்து வரும் நீரை பாசன வாய்க்கால் மூலம் வயலுக்கு பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.

விவசாயிகளே தூர்வாரினர்

இதுகுறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்தும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் வாய்க்காலை தூர்வார முடிவு செய்தனர்.

அதாவது சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்காலை விவசாயிகளே தங்களது சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.

நாங்கள் சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரியும் ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் தண்ணீர் வயலுக்கு பாயாமல் உள்ளது.

கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story