வீட்டின் உரிமையாளருக்கு, என்ஜினீயர் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்


வீட்டின் உரிமையாளருக்கு, என்ஜினீயர் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
x

வீடுகட்டிய 2 ஆண்டுகளில் தரைத்தளம் உள்வாங்கியதால் வீட்டின் உரிமையாளருக்கு, என்ஜினீயர் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர்


வீடுகட்டிய 2 ஆண்டுகளில் தரைத்தளம் உள்வாங்கியதால் வீட்டின் உரிமையாளருக்கு, என்ஜினீயர் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தரைதளம் உள்வாங்கி விட்டது

திருவாரூர் மாவட்டம், கீழக்காவாதுகுடி. தேவகி நகரை சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவர் கடந்த 2017-ம் ஆண்டு விளமல் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ரவிந்தகுமாரிடம், வீடுகட்ட ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக ராஜரெத்தினத்திடம் இருந்து ரூ.19 லட்சத்து 14 ஆயிரத்து 497-யை பெற்று கொண்டு வீட்ைட கட்டி அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்தநிலையில் அந்த வீடு கட்டிய 2 ஆண்டுகளில் தரைத்தளம் உள்வாங்கியது. இதுகுறித்து என்ஜினீயரிடம், ராஜரெத்தினம் கேட்ட போது, பணி முடிந்த பின்னர் மராமத்து பணிகளை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

குறைதீர் ஆணையத்தில் வழக்கு

இந்த நிலையில் ராஜரெத்தினம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி என்ஜினீயரே மராமத்து பணிகளை செய்து தரவேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோா் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தவழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.

ரூ.2 லட்சம் இழப்பீடு

அந்த தீர்ப்பில் ராஜரெத்தினத்தின் வீட்டிற்கு புதிதாக டைல்ஸ் பதிக்க ஆகும் செலவு மற்றும் அவருக்கு ஏற்பட்டுள்ள மனஉளைச்சல், பொருள் நஷ்டத்திற்கு ரூ.2 லட்சத்தை என்ஜினீயர் ரவிந்தகுமார், ராஜரெத்தினத்துக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

மேலும் வழக்கு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். உத்தரவு பிறப்பித்த 6 வாரங்களுக்குள் இந்த தொகையை வழங்கவேண்டும், தவறும் பட்சத்தில் 9 சதவீதம் ஆண்டு வட்டியுடன் சேர்ந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் திருத்துறைப்பூண்டி மகாதேவன் காலனியை சேர்ந்த மனோகரன் மகள் சினேகா. இவருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய கடந்த 2021-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி தாசில்தாரிடம் மனு கொடுத்து அதற்கான தொகை ரூ.800 மற்றும் ரூ.200-யை கருவூல கணக்கில் செலுத்தியுள்ளார்.

அதன் பின்னர் பலமுறை தாசில்தார் மற்றும் நிலஅளவையர் நேரில் சந்தித்தும் நிலத்தை அளவீடு செய்யவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த சினேகா திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதன்பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு நிலத்தை அளந்து கொடுத்துள்ளனர்.

மன உளைச்சல்

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர்ஆணையதலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் அளித்த தீர்ப்பில் சினேகாவிற்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு எதிர்த்தரப்பினர்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ ரூ.20 ஆயிரம் இழப்பீடாக வழங்கவேண்டும்.

மேலும் வழக்குத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த தொகையை 6 வார காலத்திற்குள் வழங்க தவறினால் வழக்கு செலவு தொகை நீங்கலாக 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story