ஆற்றுக்குள் சரிந்து விழும் நிலையில் ஆபத்தான பாலம்


ஆற்றுக்குள் சரிந்து விழும் நிலையில் ஆபத்தான பாலம்
x

ஆற்றுக்குள் சரிந்து விழும் நிலையில் ஆபத்தான பாலம்

திருவாரூர்

அகரப்பொதக்குடியில் ஆற்றுக்குள் சரிந்து விழும் நிலையில் ஆபத்தான பாலம் உள்ளது. எனவே புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள அகரப்பொதக்குடியில் வெள்ளையாற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக நடைபாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை அகரப்பொதக்குடி, ஆய்குடி, வாழச்சேரி, பொதக்குடி, கண்கொடுத்தவனிதம், திருமாஞ்சோலை, புதுக்குடி, பூதமங்கலம், காவாலக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த பாலம் சேதமடைந்து காணப்பட்டது. தற்போது பாலம் பலம் இழந்த நிலையில் சேதமடைந்து தொங்கு பாலம் போல நடுமையம் ஆற்றுக்குள் சரிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கிறது.

தடுப்பு கம்பிகள் விலகியும், பாலத்தின் முகப்பு பகுதியில் பாலம் அகன்ற நிலையிலும் காணப்படுகிறது. ஆனாலும் ஆபத்தான நிலையில் உள்ள அந்த பாலத்தையே அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். பாலத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபரீதம் ஏற்படுமோ? என்ற அச்சம்

இதுகுறித்து ஆய்குடி பகுதியை சேர்ந்த மும்தாஜ் பேகம் கூறுகையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் என்பதால், தற்போது பலம் இழந்து சேதமடைந்துள்ளது. பாலம் ஆபத்தான நிலையில் சரிந்து கீழே விழும் வாய்ப்பு உள்ளது. நடுமையத்தில் சரிந்த பாலம் எந்த நேரத்திலும் ஆற்றுக்குள் சரிந்து விழுந்து விபரீதம் ஏற்படுமோ? என்று மக்கள் அச்சத்துடன் உள்ளனர். ஆபத்தான நிலையில் பாலம் இருந்தும், அதனையே பயன்படுத்த வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். மேலும், பாலத்தை கடந்து சென்று வர மிகவும் சிரமமாகவே உள்ளது. வயதானவர்கள், அவசரமாக செல்பவர்களுக்கு இந்த பாலம் உதவிகரமாக தற்போது இல்லை. அதனால் பாலம் சரிந்து விழுந்து பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு, அகலமான புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்றார்.

புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

ஆய்குடி பகுதியை சேர்ந்த தென்றல் ஷபி கூறுகையில், பாலம் பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அதே ஆபத்தான பாலத்தையே பயன்படுத்த வேண்டிய பரிதாப நிலை உள்ளது. ஆற்றின் குறுக்கே அந்தரத்தில் தொங்கும் பாலத்தை கடந்து சென்று வருவதற்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன.

அதுவும் ஆற்றில் வரும் தண்ணீர் பாலத்தை தொட்டு செல்லும் தூரத்தில் பாலம் ஆற்றுக்குள் சரிந்து உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், ஆஸ்பத்திரி, கடைவீதி சென்று வருவோர், வேறு கிராமங்களில் இருந்து வந்து செல்வோர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு விரைவாக புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story