சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்
x

சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்

தஞ்சாவூர்

உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாயில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாய்

உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாயில் தலைப்பு திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை ஏரியில் உள்ளது. இந்த ஏரியிலிருந்து ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டு பூதலூர் ஒன்றியம் நவலூர், ராயமுண்டான்பட்டி, வெண்டையன் பட்டி, சுரக்குடிபட்டி, கோட்டரப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு 16 பிரதான ஏரிகள் மூலம் நீர் நிரப்படும். பின்னர் அதிலிருந்து கிளை வாய்க்கால்கள் மூலமாக பாசனம் நடைபெறுவது வழக்கம்.

நீர்க்கசிவினால் பாதிப்பு

இந்த ஆண்டு வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து பூதலூர் ஒன்றிய பகுதிக்கு நீர் திறக்கப்பட்டு சில நாட்களிலேயே கால்வாய் தலைப்பிற்கு அருகில் இருந்த பாலத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு கால்வாயில் வந்த தண்ணீர் முழுமையும் காட்டாற்று பகுதியில் சேர்ந்தது. இதனால் உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இந்த கால்வாய் பாலத்தில் நீர்க்கசிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கடந்த 14.9.22 அன்று பூதலூர் தாலுகா அலுவலகத்தில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் திருவெறும்பூர் ஆற்று பாதுகாப்பு கோட்ட உதவி பொறியாளர், நீர்க்கசிவு ஏற்பட்ட சைபன் எனப்படும் பாலம் 70 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கல்லால் கட்டப்பட்டது. இதனை தற்காலிகமாக சீரமைக்க இயலாது. முழுமையாக மறு கட்டுமானம் செய்ய வேண்டும். எனவே இந்த பணிகளை செய்ய உரிய மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாற்று ஏற்பாடாக கட்டளை கால்வாய் மூலம் குறிப்பிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். இதுவரை உடைந்து கிடக்கும் உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாய் பால பகுதியையும், நீர்க்கசிவு ஏற்பட்ட பகுதிகளையும் சீரமைக்கவில்லை. எனவே பூதலூர் ஒன்றிய பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் உய்யக்குண்டான் நீட்டிப்பு வாய்க்கால் சைபன் எனப்படும் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story