தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த அனுமதிகோரி கவுன்சிலர்கள் போலீசில் மனு


தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த அனுமதிகோரி கவுன்சிலர்கள் போலீசில் மனு
x
தினத்தந்தி 1 July 2023 8:18 PM GMT (Updated: 2 July 2023 9:21 AM GMT)

தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த அனுமதிகோரி கவுன்சிலர்கள் போலீசில் மனு அளித்தனர்.

சேலம்

தம்மம்பட்டி:

தம்மம்பட்டி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 13 தி.மு.க. கவுன்சிலர்களும், 3 அ.தி.மு.க. கவுன்சிலர்களும், 2 காங்கிரஸ் கவுன்சிலர்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று 11 தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதிகோரி மனு கொடுத்தனர். அதில் பேரூராட்சி தலைவி கவிதா, அவருடைய கணவரும், கவுன்சிலருமான ராஜா ஆகியோர் தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை தன்னிச்சையாக நடத்துகின்றனர்.

பேரூராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றால் தலைவியின் கணவரிடம் மனுவை கொடுக்குமாறும், பேரூராட்சி தூய்மை பணியாளர்களை தலைவியின் கணவர் மிரட்டுவதால் அவர்கள் பணிக்கு வருவதில்லை. எனவே பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 7-ந் தேதி தம்மம்பட்டி பஸ் நிலையம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் 15 பேரும் ஆத்தூர் உதவி கலெக்டர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடமும் இதுதொடர்பாக மனு கொடுத்தனர். இந்த சம்பவம் தம்மம்பட்டி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story