குடிசை தீப்பிடித்து எரிந்து சேதம்
பரமத்தி அருகே குடிசை தீப்பிடித்து எரிந்து சேதமானது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மாணிக்கநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 37) விவசாயி. இவரது குடிசையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிய தொடங்கியது.
இதுகுறித்து நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுத்தனர். இருப்பினும் குடிசை வீட்டில் இருந்த பீரோ, மின்விசிறி, கிரைண்டர், மிக்சி மற்றும் லேப்டாப், துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் உள்பட ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.