சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய கலெக்டர்
அரக்கோணத்தில் நடக்க இருந்த சிறுமியின் திருமணத்தை கலெக்டர் தடுத்து நிறுத்தினார். குழந்தை திருமணம் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் நடக்க இருந்த சிறுமியின் திருமணத்தை கலெக்டர் தடுத்து நிறுத்தினார். குழந்தை திருமணம் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
அரக்கோணத்தை அடுத்த அவிநாசி கண்டிகை கிராமத்தை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், வடமாம்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அரக்கோணத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கும் திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்று திருமண நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தினார்.
திருமணம் செய்ய இருந்த வாலிபருக்கும், சிறுமிக்கும் அறிவுரை கூறினார். பின்னர் இரு குடும்பத்தினரையும் அழைத்து பெண்ணிற்கு 18 வயது நிறைவடையும் வரை திருமணம் செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்குமாறும், குழந்தை திருமணத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விளக்கினார்.
தொடர்ந்து, அந்த சிறுமியை கல்வி கற்க வைக்கிறேன் என்று பெற்றோரிடத்தில் பத்திரத்தில் எழுதி வாங்கினார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
பின்னர் நிருபர்களிடம் பேசிய கலெக்டர், ராணிபேட்டை மாவட்டத்தில் இது வரை 20 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரக்கோணம் பகுதியில் குழந்தை திருமணம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளிகள் திறந்ததும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார். அப்போது, கோட்டாட்சியர் சிவதாஸ், தாசில்தார் பழனி ராஜன், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாம்ராஜ், நிரோஷா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் லில்லி மற்றும் பலர் உடனிருந்தனர்.