மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x

மீனவர்கள் மீது நடந்தப்படும் தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவின் இறையாண்மை மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகத் தான் பார்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 11 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை கைது செய்யும் சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் மீது ஒருபுறம் கைது, இன்னொருபுறம் கடற்கொள்ளையர்களை ஏவித் தாக்குதல் என இரு முனைத் தாக்குதலை சிங்கள அரசு நடத்தி வருகிறது. கடந்த இரு வாரங்களில் தமிழக மீனவர்கள் மீது மூன்று முறை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இப்போது தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிங்கள அரசின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.... ஒட்டுமொத்த இந்தியாவின் இறையாண்மை மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகத் தான் பார்க்க வேண்டும்.

கடந்த இரு மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 120 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 52 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 68 பேரும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமின்றி, இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு 6 மாதம் சிறை, மூன்றாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு சிறை என தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த போது உதவியது இந்தியா தான். ஆனால், அந்த நன்றி கூட இல்லாமல் மீனவர்களை கைது செய்வதன் மூலம் இந்தியாவை இலங்கை சீண்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும். இன்னொருபுறம், இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story