கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், தினமும் வேலை முடிந்து குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. மது அருந்தும் பழக்கத்தை கைவிடும்படி மனைவி பலமுறை வலியுறுத்தியும் ராஜ்குமார் கேட்கவில்லை. அதனால் விரக்தி அடைந்த அவர் 1½ மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் அவர் மனஉளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜ்குமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். அப்போது வீடு திரும்பிய ராஜேந்திரன் தூக்கில் மகன் தொங்குவதை கண்டு கதறி அழுதார். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஞ்சனா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.