பாலம், மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


பாலம், மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

விழுப்புரம் நகரில் ரூ.4.30 கோடி மதிப்பில் நடந்து வரும் பாலம், மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் (கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே) நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறையின் மூலம் பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலம் தொடங்க உள்ளதால் இப்பணியினை விரைந்து முடிப்பதுடன், இது நகரின் முக்கியப்பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் விரைந்து பணியினை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை

மேலும் மாவட்ட கலெக்டர் மோகன் கூறுகையில், விழுப்புரம் நான்கு வழிச்சாலை பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீர் ஆங்காங்கே நகர் பகுதியின் பல்வேறு இடங்களில் தேங்குவதை கண்டறிந்து அதை சீர்செய்திடும் வகையில் விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் மூலம் 2021-2022-ம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை கி.மீ 162/2- 162/6-ல் சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ. 161/0, 161/4-ல் பாக்ஸ் கல்வெட்டு புதிதாக கட்டுதல் என ரூ.4.30 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு தற்போது பெருந்திட்ட வளாகம் அருகே புதிய பாலம் கட்டப்படுகிறது.

அதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி முடிவுற்றவுடன் மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் செல்கிற வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் தன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஷோபனா, உதவி பொறியாளர்கள் வசந்தப்பிரியா, அய்யனார் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story