கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா


கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
x

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.

திருப்பூர்

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.

கொண்டத்து காளியம்மன் கோவில்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கொண்டத்து காளியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் நேற்று முன்தினம் பக்தர்கள் உத்தம லிங்கேசுவரர் கோவிலுக்கு சென்று மஞ்சள் நீராடினார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

முன்னதாக நேற்று காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூக்கள் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த விறகுகளை வைத்து கோவில் அர்ச்சகர்கள் மந்திரங்கள் முழங்க விறகுகளை பற்ற வைத்து குண்டம் திறந்து பூப்போடுதல் நடைபெற்றது. குண்டத்திற்காக 4 டன் விறகு பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள்

பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, திருப்பூர் மாநகர பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் பெருமாநல்லூருக்கு இயக்கப்பட்டன. திருப்பூர் மத்திய மற்றும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூருக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

முன்னதாக பக்தர்கள் கொண்டு வந்த உலர் பழங்களான ஏலக்காய், முந்திரி, திராட்சை, கிவி, கருப்பு திராட்சை, பலாப்பழம், ஆரஞ்சு, தாமரைப்பூ உள்ளிட்டவை கொண்டு கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் காலை முதல் இரவு வரை சாமி தரிசனம் செய்தனர். குண்டம் இறங்கும் விழாவைெயாட்டி சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Related Tags :
Next Story