70 ஆண்டுகளுக்குப்பின் தலைஞாயிறு குற்றம்பொறுத்தநாதர் கோவில் குடமுழுக்கு


70 ஆண்டுகளுக்குப்பின்  தலைஞாயிறு குற்றம்பொறுத்தநாதர் கோவில் குடமுழுக்கு
x

தலைஞாயிறு குற்றம்பொறுத்தநாதர் கோவில் குடமுழுக்கு 70 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது.

மயிலாடுதுறை

தலைஞாயிறு குற்றம்பொறுத்தநாதர் கோவில் குடமுழுக்கு 70 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது.

குற்றம் பொறுத்தநாதர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறில் குற்றம் பொறுத்தநாதர் கோவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், 27-வது தேவார தலமாக இக்கோவில் விளங்குகிறது. சூரிய பகவான் இங்கு வழிபட்டதால் `தலைஞாயிறு' என்ற பெயர் ஏற்பட்டது.

இங்கு குற்றம் பொறுத்த நாதர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியும், தாயார் கோல்வளை நாயகி தெற்கு நோக்கியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், லிங்கோத்பவர், துர்கை மற்றும் பிரம்மன் சன்னதியும் உள்ளது.

மன்னருக்கு குழந்தை பாக்கியம்

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம், வவ்வால் நெத்தி அமைப்பில் உள் மண்டபம் என இக்கோவில் அமைப்பு சிறப்பு மிக்கதாக உள்ளது. விசித்திராங்கன் என்ற மன்னன் தனது மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்ததாகவும், இறைவன் அருளால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததாகவும், இதனால் மகிழ்ந்த மன்னன் இக்கோவிலை அழகாக கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

இக்கோவிலில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், குழந்தை பிறந்து, இறந்துவிடும் தோஷம் உள்ளவர்களுக்கு இக்கோவில் வழிபாடு நலம் தரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். குற்றங்கள் புரிந்தவர்கள் தங்களுடைய குற்றத்தை எண்ணி வருந்தி இக்கோவில் இறைவனை வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

70 ஆண்டுகளுக்குப்பின்...

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோவிலில் கடைசியாக 1953-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தது. அதன்பிறகு 70 ஆண்டுகளுக்குப்பின் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் கடந்த 19-ந் தேதி தொடங்கின. நேற்று 6-வது கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

இதன் முடிவில் புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடாகி, கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story