உடையார்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


உடையார்குடி  மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

உடையார்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலூர்


காட்டுமன்னார்கோவில்,



காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம் போன்றவை நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை கோவில் வளாகத்தில் நடந்தது. முன்னதாக பக்தர்கள் பால் காவடி, செடல் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீமிதித்து நேர்த்திக்கடன்

தொடர்ந்து மாலை 5 மணியளவில் காட்டுமன்னார்கோவில் வடவாற்றங்கரையில் இருந்து பூசாரி சக்தி கரகத்துடனும், பக்தர்கள் தீச்சட்டிகளையும் கைகளில் ஏந்தி கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவில் வளாகத்தை வந்தடைந்தனர். அதன்பிறகு முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் உள்பட சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.

விழாவில் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர். சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பரண்டு ரூபன் குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, மைக்கேல் இதயராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


Next Story