வரதராஜ பெருமாள் கோவில் ரூ.2½ கோடி செலவில் திருப்பணி
வெள்ளகோவிலில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் ரூ.2½ கோடி செலவில் திருப்பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது.
வெள்ளகோவிலில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் ரூ.2½ கோடி செலவில் திருப்பணி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது.
வரதராஜ பெருமாள் கோவில்
வெள்ளகோவிலில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர்.
இந்த கோவில் தற்போது தரை மட்டத்திலிருந்து தாழ்வான நிலையில் இருப்பதாலும், மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை சென்று விடுகிறது. இதனால் மழை காலங்களில் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். மேலும் தண்ணீரை வெளியேற்ற வழியும் இல்லை. தானாக வடியும்வரை கோவிலில் பூஜை செய்ய முடியாது.
எனவே கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ. 2 கோடியே 50 லட்சம் செலவு செய்ய அரசு அனுமதி பெற்று திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து கோவிலுக்கு திருப்பணிகள் செய்ய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டம்
இந்த நிலையில் கோவிலில் திருப்பணி மேற்கொள்வது தொடர்பாக திருப்பணி குழுவினரின் ஆலோசனை கூட்டம் வெள்ளகோவில்-மூலனூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பணி குழு ஏ.எம்.சி.செல்வராஜ் தலைமை தாங்கினார். ராசி கே.ஆர்.முத்துக்குமார், சபரி எஸ்.முருகானந்தன், பாலசுப்பிரமணியம், சக்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி பாலாலய விழா நடைபெற நடவடிக்கை மேற்கொள்வது, அறநிலையத்துறை சார்பில் அரசு தலைமை ஸ்தபதியால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட கோவில் வரைபடத்தினைப் பெற்று குறைந்த மதிப்பீட்டில் தகுதி வாய்ந்த ஸ்தபதியிடம் பெறப்படுகிற விண்ணப்பத்தை அங்கீகரிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.