மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை பெரம்பலூருக்கு மாற்றக்கோரி ஆசிரியர்கள் ஊர்வலம்


மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை பெரம்பலூருக்கு மாற்றக்கோரி ஆசிரியர்கள் ஊர்வலம்
x

மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை பெரம்பலூருக்கு மாற்றக்கோரி ஆசிரியர்கள் ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் அருள்ஜோதி, செல்வராஜ், சின்னசாமி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், பெரம்பலூர் கடைவீதியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த மாவட்ட தொடக்ககல்வி அலுவலகம் குன்னம் தாலுகா பேரளிக்கு மாற்றப்பட்டது. இதனால் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், சங்க நிர்வாகிகள் பேரளியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சிரமத்துடன் சென்று வருகின்றனர். அந்த அலுவலகத்தை மீண்டும் பெரம்பலூருக்கு மாற்றக்கோரி எம்.எல்.ஏ. வலியுறுத்தியும், மாவட்ட கல்வி அலுவலகம் அதனை மாற்றுவதற்கு முன்வரவில்லை. எனவே பெரம்பலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை பேரளியில் இருந்து பெரம்பலூருக்கு மாற்ற கலெக்டா் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். மேலும் அவர்கள் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டர் கற்பகத்தை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணனை சந்தித்து ஆசிரியர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.


Next Story