டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு கலெக்டரிடம் முறையிடலாம்: அரசு தரப்பில் ஐகோர்ட்டில் பதில்


டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு கலெக்டரிடம் முறையிடலாம்: அரசு தரப்பில் ஐகோர்ட்டில் பதில்
x

விதிகளை மீறி பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடக்கோரி கலெக்டரிடம் முறையிட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி மாநகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகளில் இருந்து 50 மீட்டர் தூரத்திலும், மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திலும் தான் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட வேண்டும்.

இந்த விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடாமல், விதிகள் படி அமைக்கப்பட்டிருந்த கடைகள் மூடப்பட்டது.

விதிமீறல் கடைகளை தொடர்ந்து செயல்பட அனுமதித்தது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளை மீறி செயல்படும் மதுக்கடைகளை மூடுவதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும்

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

முறையீடு செய்ய வழிவகை

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது விதிகளை மீறி மதுபானக்கடைகள் செயல்படுகிறது என தெரியவந்தால் அந்த கடைகளை மூடும்படி மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Next Story