தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான்-மத்திய மந்திரி அனுராக்சிங் தாகூர் தொடங்கி வைக்கிறார்


தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்கான விழிப்புணர்வு மாரத்தான்-மத்திய மந்திரி அனுராக்சிங் தாகூர் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:46 PM GMT)

தேசிய அளவிலான தமிழ் பாரம்பரிய விளையாட்டிற்கான விழிப்புணர்வு மாரத்தான் வருகிற 27-ந்தேதி காரைக்குடியில் நடக்கிறது. இப்போட்டியை மத்திய மந்திரி அனுராக்சிங்தாகூர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்.

சிவகங்கை

காரைக்குடி

தேசிய அளவிலான தமிழ் பாரம்பரிய விளையாட்டிற்கான விழிப்புணர்வு மாரத்தான் வருகிற 27-ந்தேதி காரைக்குடியில் நடக்கிறது. இப்போட்டியை மத்திய மந்திரி அனுராக்சிங்தாகூர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்.

மாரத்தான் ஓட்ட பந்தயம்

தமிழ் பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையிலும், அந்த விளையாட்டின் பெருமைகளை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான மாரத்தான் ஓட்ட பந்தயம் தமிழ்நாடு கிரிடா பாரதி அமைப்பின் சார்பில் வருகிற 27-ந்தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு கல்லூரி சாலையில் நடைபெறும் இந்த போட்டிக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அனுராக்சிங்தாகூர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைக்கிறார். முன்னாள் தடகள வீராங்கனையும், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் பி.டி.உஷா சிறப்புரையாற்றுகிறார். அகில பாரத கிரிடா பாரதி அமைப்பின் தலைவரும், அர்ஜூனா விருது பெற்றவரும், ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கம் பெற்றவருமான கோபால் சைனி முன்னிலை வகிக்கிறார்.

ரூ.1 லட்சம் பரிசு

இந்த போட்டியில் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கான 14 வயதிற்கும் மேல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி போட்டிகளும், 5 கிலோ மீட்டருக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான தனித்தனி போட்டிகளும் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், 4-வது பரிசாக ரூ.10 ஆயிரமும், 5-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஆறுதல் பரிசாக அடுத்து வரும் 20 பேருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.

இதேபோல் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான போட்டியில் முதல் பரிசாக ரூ.7 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 4-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், 5-வது பரிசாக தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

மேலும் ஆறுதல் பரிசாக அடுத்து வரும் 20 பேருக்கு ரூ.300 வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை கிரிடா பாரதி அமைப்பின் தலைவர் திருமாறன் மற்றும் துணைத்தலைவர் சிவராஜாமாதவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story