தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சொத்துவரி கட்ட காலஅவகாசம் வழங்கக்கோரி தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள தனியார் பள்ளி கட்டிடங்களுக்கான சொத்துவரி கட்ட காலஅவகாசம் வழங்க கோரி இன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், அரசு பள்ளிகளுக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் சொத்துவரி இல்லாத நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் 150 சதவீதம் உயர்த்தப்பட்ட சொத்துவரியை உடனடியாக கட்ட வற்புறுத்துவது, பள்ளிகளை ஜப்தி செய்வது, சீல் வைப்பது, மின்இணைப்பை துண்டிப்பது போன்ற சட்டத்திற்கு விரோதமான காரியங்களை ஊழியர்கள், அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
சொத்துவரி, மின்கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள உச்சநீதிமன்ற வழக்கு தீர்ப்பு வரும் வரை தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் சொத்துவரி வசூலிப்பதை கைவிட வேண்டும். ஜூன் மாதம் சொத்துவரி கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஆர்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார், செயலாளர் பிரகாஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் குமார், பொருளாளர் சின்னதுரை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகி முருகன், பாரி மற்றும் சங்க நிர்வாகிகள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் கிருஷ்ணகஜேந்திரன் நன்றி கூறினார்.