தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் நிர்வாகத்தை கண்டித்து கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

கடலூர்

கடலூர் முதுநகர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இது போன்ற செயல்களை செய்து வரும் சிப்காட் தொழிற்சாலைகள் நிர்வாகத்தை கண்டித்து, சிப்காட் வளாகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இருப்பினும் திட்டவட்டமாக முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் முற்றுகை போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் கடலூர் உழவர் சந்தை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தனர்.

ஆர்ப்பாட்டம்

அதன்படி நேற்று கடலூர் உழவர் சந்தை அருகில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசுகையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் சிப்காட் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும். இந்த தொழிற்சாலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால்வளவன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், மாநகராட்சி கவுன்சிலருமான தி.கண்ணன், தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் வக்கீல் லெனின், மாவட்ட துணை செயலாளர் சதீஷ், நிர்வாகிகள் கிட்டுகுமார், தண்டபாணி, ரத்தினம், சுரேந்தர், சதாசிவம், வெங்கட், முத்து, செந்தில், பிரசாந்த், ராமு உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story