தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி


தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 18 July 2023 6:45 PM GMT (Updated: 18 July 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு நாள் விழா குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் தமிழ்நாடு வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கி கூறும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியபடி சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மந்தவெளியில் முடிவடைந்தது.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை மாணவ-மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிட்டனர்.

மாணவர்களுக்கு பரிசு

பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களிடையே தமிழ்நாடு வரலாறு குறித்து நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர்வழங்கினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story