மேகதாது விவகாரம்: தமிழக அனைத்து கட்சி குழு டெல்லி பயணம்: மத்திய மந்திரியுடன் இன்று சந்திப்பு


மேகதாது விவகாரம்: தமிழக அனைத்து கட்சி குழு டெல்லி பயணம்: மத்திய மந்திரியுடன் இன்று சந்திப்பு
x

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி தலைவர்கள் குழு டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை,

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி தலைவர்கள் குழு டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியை சந்தித்து இன்று பேசுகின்றனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. குடிநீர் திட்டத்துக்காக அந்த அணை கட்டப்படுவதாக அந்த அரசு கூறுகிறது.

ஆனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி, காவிரி பாயும் மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

அனைத்து கட்சி தலைவர்கள்

இந்தநிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களின் குழு டெல்லி சென்றனர்.

அ.தி.மு.க. தரப்பில் தம்பிதுரை, பா.ம.க. தரப்பில் ஜி.கே.மணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தனித்தனியாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளனர்.

அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனாவும் சென்றுள்ளார்.

இன்று சந்திப்பு

இன்று (புதன்கிழமை) காலை டெல்லியில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் ஆஜராகும் சட்ட வல்லுனர்கள், மூத்த வக்கீல்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பின்னர் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் சென்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. அப்போது அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் அளிப்பார். மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று அனைவரும் மத்திய மந்திரியிடம் இந்த சந்திப்பின்போது வலியுறுத்துகின்றனர்.

பின்னர் இன்று மாலை 5.25 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னையை இரவு 8.15 மணிக்கு வந்தடைகிறார்.


Next Story