கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி


தினத்தந்தி 30 Oct 2022 6:45 PM GMT (Updated: 30 Oct 2022 6:46 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டத்தில் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

வென்னிமலை- பண்பொழி

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தர் சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், சுவாமி சப்பரத்தில் கோவிலை வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை 8 மணி முதல் மதியம் 12½ மணிவரை கும்பஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டிஹோமம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு யாகசாலை பூஜையை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று (திங்கட்கிழமை) சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்பாள் தபசு மண்டபம் செல்லுதல். மாலை 5 மணிக்கு சுவாமி காட்சி அருளுதல், 6 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை, மலைக்கோவிலில் திருமலை குமரன் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) தேரோட்டமும், கும்பிடு கரண நேர்ச்சையும் நடைபெறும்.

சங்கரன்கோவில்- செங்கோட்டை

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கஜமுகன், அக்னி முகன், பானு கோபன் சிங்கமுகன் ஆகிய அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆறுமுக நயினார் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சாமி கோவிலிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று காலை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா இடம்பெற்றது. 5.30 மணிக்கு ஆனைமுகம், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களை கொண்ட சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகிரி

சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு சுப்பிரமணியசாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி குமாரபுரம், காந்தி ரோடு, ஏழாம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு, முக்கிய ரத வீதிகள் வழியாக வலம் வந்தார். அதனைத்தொடர்ந்து மேலரத வீதியில் சேனைத்தலைவர் திருமண மண்டபம் அருகே கருப்பசாமி கோவில் சந்திப்பு பகுதியில் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் அல்லா கோவில் சந்திப்பு பகுதியில் சிங்க முகம் கொண்ட சூரனையும், இறுதியில் பஸ்நிலையம் அருகே ஏழாம் திருவிழா மண்டபத்தின் முன்பாக சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் (எ) சின்னத்தம்பியார் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

இதேபோல் சிவகிரி அருகே கூடலூர் பகதியில் அமைந்துள்ள நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கடையம்

கடையம் வில்வவனநாதர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று காலைசஷ்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பட்டு புது கிராமம், பழைய கிராமம் ரத வீதி உலா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது இதேபோல் திருமலையப்பபுரம், ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளத்திலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story