வார்டன்கள் மோதல் விவகாரம்: சேலம் பெண்கள் சிறையில் மத்திய சிறை சூப்பிரண்டு திடீர் ஆய்வு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவு


வார்டன்கள் மோதல் விவகாரம்:  சேலம் பெண்கள் சிறையில்  மத்திய சிறை சூப்பிரண்டு திடீர் ஆய்வு  விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவு
x
தினத்தந்தி 16 Dec 2022 8:00 PM GMT (Updated: 16 Dec 2022 8:00 PM GMT)

வார்டன்கள் மோதல் விவகாரம் தொடர்பாக சேலம் பெண்கள் சிறையில் மத்திய சிறை சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

சேலம்

சேலம்,

பெண்கள் கிளை சிறை

சேலம் மத்திய சிறையின் எதிரில் பெண்கள் கிளை சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பெண்கள் கிளை சிறையில் வார்டன்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லெஸ்பியன் தொடர்பாக இருவர் மோதிக்கொண்ட சம்பவமும் நடநதது.

இது தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறை சூப்பிரண்டு விசாரணை

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதேபோன்று பெண்கள் கிளை சிறையில் நடக்கும் எந்தவித சம்பவமாக இருந்தாலும், பெண் சிறை அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்று குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனிடையே, சேலம் மத்திய சிறை சூப்பிரண்டும், கட்டுப்பாட்டு அலுவலருமான தமிழ்செல்வன் நேற்று காலை அதிரடியாக பெண்கள் சிறைக்கு சென்று திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் வார்டன்கள் மற்றும் கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, கைதிகள் சிலர், தங்களை ஆபாச வார்த்தைகளால் பேசி லத்தியால் அடித்ததாக சிறை வார்டன்கள் மீது புகார் செய்தனர். இதையடுத்து கைதிகளை அடித்ததாக கூறிய வார்டன்களை அழைத்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் எச்சரிக்கை செய்தார்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இது ஒருபுறம் இருக்க, பெண்கள் கிளை சிறையில் உள்ள சமையல் அறையில் சில பெண் கைதிகளை அழைத்து சமையல் செய்வது வழக்கம். அவ்வாறு அழைக்கப்பட்ட 4 கைதிகள் சமையல் அறையில் இருந்து வெளியே சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சமையல் அறையில் இருந்து கைதிகளை வெளியே அனுப்பிய பொறுப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) கொடுக்க சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் உத்தரவிட்டார்.

இதுதவிர, வட்டிக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அங்கு பணியாற்றும் பெண் சிறைக்காவலர்கள் மற்றும் வார்டன்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் கிளை சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story